இந்தியாவின் மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவு ஏற்றுமதியை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1 அன்று நேஷனல் சீஃபுட் ஸ்கில் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது பதிப்பை MPEDA நடத்தவுள்ளது
Chennai / June 29, 2026
சென்னை, ஜூன் 29: கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான MPEDA, கடலுணவுகளுக்கு மதிப்புக்கூட்டல் சேர்ப்பதற்கான நேஷனல் ஸ்கில் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது பதிப்பை ஜூலை 1 அன்று இங்கு நடத்தவுள்ளது. இதில், மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவுப் பொருட்களைத் தயாரிப்பதில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காக நாடு முழுவதிலுமிருந்து திறமையான கடலுணவு பதப்படுத்தல் நிபுணர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த பங்கேற்கின்றனர்.
ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறும் Seafood Expo Bharat (SEB) 2026-இன் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தப் போட்டியானது, புதுமை மற்றும் தரத் தரங்களை ஊக்குவிப்பதையும், துறையில் உள்ள திறமைகளை அங்கீகரிப்பதையும், இந்தியாவின் கடலுணவு பதப்படுத்தல் துறையில் பணியாளர் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் அதிக மதிப்புக்கூட்டலை உருவாக்குவதையும் இது ஊக்குவிக்கிறது.
திறன் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது பதிப்பை முன்னிட்டு, MPEDA நாடு முழுவதும் விரிவான திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தியது. இதன் கீழ் 50 கடலுணவு மதிப்புக்கூட்டல் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றின் மூலம் 2,500-க்கும் மேற்பட்ட கடலுணவு பதப்படுத்தல் தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு, சர்வதேச சந்தைகளில் அதிக தேவை உள்ள கடல்சார் பொருட்களைத் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில், பிரெட் ஸ்குவிட் ரிங்ஸ், நோபாஷி (நீட்டிக்கப்பட்ட இறால்), பிரெட் பட்டர்ஃப்ளை இறால், சமைக்கப்பட்ட தோல் நீக்கப்பட்டு நரம்பு அகற்றப்பட்ட வால் கொண்ட இறால் (PDTO), மசாலாவில் ஊறவைக்கப்பட்ட இறால் ஸ்கியூவர்கள் மற்றும் மீன் ஃபில்லெட்டுகள் போன்ற பொருட்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு பயிற்சித் திட்டத்திற்குப் பிறகும் தொடக்கநிலை திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த செயல்திறன் காட்டியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தப் போட்டி, கடலோர மாநிலங்களில் நடத்தப்பட்ட மாநில அளவிலான திறன் ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து, மும்பையில் (மேற்குக் கடற்கரை) மற்றும் விஜயவாடாவில் (கிழக்குக் கடற்கரை) ஆகிய இடங்களில் நடைபெற்ற பிராந்திய அளவிலான திறன் ஒலிம்பியாட் போட்டிகள் மூலம் இப்போட்டி முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இந்தப் பிராந்தியப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட முதல் 10 பேர் தற்போது நேஷனல் சீஃபுட் ஸ்கில் ஒலிம்பியாட் கிராண்ட் ஃபினாலேக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இறுதிப்போட்டியில், கடலுணவு பதப்படுத்தல் துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மதிப்புமிக்க நடுவர் குழுவின் முன்னிலையில் போட்டியாளர்கள் தங்களது தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்துவார்கள். வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ₹1,00,000 (முதல் பரிசு) ₹75,000 (இரண்டாம் பரிசு), ₹50,000 (மூன்றாம் பரிசு), ₹25,000 (நான்காம் பரிசு/ஆறுதல் பரிசு) என்ற வகையில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த நிகழ்வில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், கடலுணவு ஏற்றுமதியாளர்கள், சர்வதேச வாங்குநர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் Seafood Expo Bharat 2026-இல் பங்கேற்கும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற போட்டியாளர்கள் தயாரித்த விருதுபெற்ற மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவுப் பொருட்கள், ஸ்கில் ஒலிம்பியாட் பெவிலியன் காட்சிப்படுத்தப்படும். மேலும், MPEDA-இன் பயிற்சித் திட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஏற்றுமதி நோக்கிலான மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் நேரடி செயல்விளக்கங்கள் மற்றும் சுவைத்துப் பார்க்கும் அமர்வுகளும் இடம்பெறும்.
MPEDA தலைவர் திரு. பி. ஜவஹர் கூறுகையில், “நேஷனல் சீஃபுட் ஸ்கில் ஒலிம்பியாட், கடலுணவு மதிப்புச் சங்கிலி முழுவதும் சிறப்புத் திறனை வளர்ப்பதற்கான உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. திறமையான நபர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதன் மூலம், தொழில்துறையின் பணியாளர் திறனை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம். மேலும், இந்த ஒலிம்பியாட், உயர்தர கடலுணவுகளின் நம்பகமான உலகளாவிய வழங்குநராக இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது” என்றார்.
மனிதவளத்தில் முதலீடு செய்வதே நீலப் பொருளாதாரத்தில் இந்தியாவின் முன்னணி நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கிய அம்சம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த முக்கிய முயற்சி சர்வதேச சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய உயர்திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னணி சர்வதேச கடலுணவு கண்காட்சியான Seafood Expo Bharat 2026-ஐ MPEDA ஏற்பாடு செய்கிறது. இதில் 325-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அவை கடலுணவு பதப்படுத்தல், மீன்வள வளர்ப்பு, பேக் செய்யும் இயந்திரங்கள், தளவாட சேவைகள் மற்றும் அரசுத் துறை அரங்குகள் உள்ளிட்டவை தனித்தனி பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் சுமார் 5,000 பங்குதாரர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் B2B சந்திப்புகளில் பங்கேற்பார்கள். மேலும், சில்லறை விற்பனை மற்றும் உற்பத்திச் சங்கிலிகளில் தொடர்புகளை விரிவுபடுத்துவதோடு, புதுமை மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட ஐந்து இணை தொழில்நுட்ப அமர்வுகளிலும் கலந்து கொள்வார்கள்.
மேலும், இந்தக் கண்காட்சியில் ‘சீஃபுட் ப்ராசஸ்ஸிங் ஸ்கில் ஒலிம்பியாட்’ மற்றும் ’சீஃபுட் கலினரி ஒலிம்பியாட்‘ உள்ளிட்ட பணியாளர் திறன் மற்றும் சமையல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். இதன் மூலம், உலகளாவிய கடலுணவு மதிப்புச் சங்கிலி முழுவதும் பல்வேறு பங்குதாரர்கள் தங்களது சந்தையை விரிவுபடுத்தவும், மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்கவும் உதவும் இணையற்ற தளமாக இது விளங்குகிறது.
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் கடலுணவு ஏற்றுமதி, சாதனை அளவான 8.45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இதன் மூலம், உலகின் முன்னணி கடலுணவு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியா தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 670 அங்கீகரிக்கப்பட்ட கடலுணவு பதப்படுத்தல் யூனிட்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மொத்த பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 40,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாகும். இவற்றில், 127 பதப்படுத்தல் யூனிட்கள் மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இவை இந்தியாவின் மொத்த கடலுணவு ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 10 சதவீதம் (0.84 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) பங்களிக்கின்றன.
மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவுத் துறையில் உள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்பை கருத்தில் கொண்டு, 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த கடலுணவு ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் பங்கை 25 சதவீதமாக உயர்த்தும் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
இதனை அடைவதற்காக, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் MPEDA, தயாரிப்பு புதுமைகளை மேம்படுத்தவும், பதப்படுத்தல் மற்றும் மதிப்புக்கூட்டலுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பயிற்சி பெற்ற தொழில்முறை நிபுணர்களின் வலையமைப்பை உருவாக்கவும், கடலுணவு பதப்படுத்தல் துறையில் தரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.