கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA), மதிப்பூட்டப்பட்ட கடல் உணவு குறித்த தேசிய திறன் மேம்பாடு ஒலிம்பியாட்டின் இறுதிப்போட்டியில் கேரளாவைச் சேர்ந்த திரு. தன்சீர் K R வெற்றியாளராக அறிவ
Chennai / July 1, 2025
சென்னை, ஜூலை 01: உயர் விருதுகளுக்கான கடும் போட்டியில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டதற்காக, கேரளா மாநிலம் மாலிப்புரத்தில் உள்ள அபாட் ஃபுட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் திரு. தன்சீர் K R, மதிப்பூட்டப்பட்ட கடல் உணவுப் பொருட்கள் தொடர்பாக நடைபெற்ற முதன்மை தேசிய திறன் ஒலிம்பியாட் போட்டியின் வெற்றியாளராக தேர்வு செய்ய்ப்பட்டார். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று இன்று 'சீஃபுட் எக்ஸ்போ பாரத் 2025' நிகழ்வின் ஒரு பகுதியாக சென்னை நகரத்தில் நடைபெற்றது.
கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) தலைமையிலான இந்த முன்முயற்சி இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் திறமையுள்ள தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதிச்சுற்றில் நான்கு பயிற்சி பெற்ற கடல் உணவுப் பதப்படுத்தல் தொழில்நுட்ப நிபுணர்கள் தங்கள் நிபுணத்துவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.
திரு. பாலமுருகன் I (இதயம் ஃப்ரோசன் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி, தமிழ்நாடு) இரண்டாவது இடத்தையும், திருமதி சந்தியா ராணி பலபர்த்தி (கோஸ்டல் கோஆபரேஷன் லிமிடெட், காக்கிநாடா, ஆந்திரப் பிரதேசம்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். திருமதி D. அனிதா (சந்தியா அக்வா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், காக்கிநாடா) நான்காவது இடத்தைப் பிடித்தார்.
விருதுகளை இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், MPEDA ஆணைய உறுப்பினருமான ஸ்ரீ ஹிபி ஜார்ஜ் ஈடன், மற்றும் MPEDA சேர்மேன் திரு D.V. சுவாமி IAS ஆகியோர் அறிவித்தனர்.
இறுதிச்சுற்றின் போது போட்டியாளர்கள் பின்வரும் கடல் உணவுப் பொருட்களை 80 நிமிடங்களில் தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்: பிரெடெட் பட்டர்ஃபிளை இறால், குக் செய்த PDTO (பீல்டு, டீவைன்டட், டெயில்-ஆன்) இறால், பிரெடெட் ஸ்குவிட் ரிங்க்ஸ், மற்றும் PDTO (பீல்டு மற்றும் டீவைன்டட் டெயில்-ஆன்) ஸ்கூவர்டு இறால்
இந்த உணவு வகைகள் தரம், சுகாதாரம், செய்முறை மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டன.
இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றவருக்கு ரூ.1,00,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.75,000, மற்றும் மூன்றாம் இடத்துக்கான பரிசுத்தொகையாக ரூ.50,000 வழங்கப்பட்டன. நான்காவது இடம் பெற்ற நபருக்கு ரூ.25,000 ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது.
வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மதிப்பீடு செய்யும் நிபுணர்கள் குழுவில், Dr பார்வதி. U, மூத்த விஞ்ஞானி, ICAR-CIFT, கொச்சி; திரு பி. கோடேஸ்வர், செயலாக்கம் மற்றும் தர உறுதி மேற்பார்வையாளர், NIFPHATT, விசாகப்பட்டினம்; திரு ஃப்ரான்சிஸ் அஸ்ஸிசி, உற்பத்தி மேலாளர், பரையில் சீஃபுட் பிரைவேட் லிமிடெட்; திரு ஜெயன் ஜேக்கப், பொதுமேலாளர், சந்த்யா அக்வா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்; திரு கிருஷ்ணன் கே, பொதுமேலாளர், சாகர் கிராந்தி எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பங்கேற்றனர்:
இந்தத் தேசிய திறன் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக, MPEDAவின் முயற்சியை திரு ஹிபி ஜார்ஜ் ஈடன் பாராட்டினார். மதிப்பூட்டப்பட்ட கடல் உணவுப் பொருட்கள் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த முன்முயற்சியை அவர் பாராட்டி மகிழ்ந்தார்.
MPEDA சேர்மேன் இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைத்து நிபுணர்களையும் பாராட்டினார், அவர்களது தனிநபர் அர்ப்பணிப்பு, திறமை, மற்றும் மேம்பட்ட கடல் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
திறன் மேம்பாடு ஒலிம்பியாட்டின் இறுதிப் போட்டியை மத்திய மற்றும் மாநில மீன்வளத் துறைகளின் அதிகாரிகள், கடல் உணவு ஏற்றுமதியாளர்கள், வெளிநாட்டு இறக்குமதிபவர்கள் மற்றும் 'சீஃபுட் எக்ஸ்போ பாரத் 2025' இன் பிற பிரதிநிதிகள் உள்ளிட்ட பங்குதாரர்கள் பார்வையிட்டனர்.
திரு சுவாமி அவர்கள் கூறுகையில், இதன் முக்கிய நோக்கம் இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் மதிப்பூட்டல் துறையை வலுப்படுத்தவும், மதிப்பூட்டப்பட்ட கடல் உணவின் உலகளாவிய ஏற்றுமதிக்குத் தாயகமாக இந்தியாவை மாற்றுவதுமாகும். "MPEDA இதனை ஒரு வருடாந்திர நிகழ்வாக மாற்ற திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கடல் உணவு மதிப்பூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் இருந்து கடல் உணவு ஏற்றுமதிக்கு ஒரு ஊக்கத்தை வழங்கும்" என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வின் முன்னோடியாக, பயிற்சியின் போது பெறப்பட்ட செய்முறை திறன்களை மதிப்பிடுவதற்காக இந்தியாவின் மேற்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளைச் சார்ந்த கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற நிபுணர்களுக்கு MPEDA திறன் மேம்பாட்டுச் சோதனைகளை மேற்கொண்டது. திறன் மேம்பாடு ஒலிம்பியாட்டின் ஆரம்ப சுற்றுகள் மே 29 அன்று கொச்சி (மேற்கு கடற்கரை மண்டலம்) மற்றும் ஜூன் 5 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் (கிழக்கு கடற்கரை மண்டலம்) நடைபெற்றது. ஜூன் 30 அன்று ஒலிம்பியாட்டின் அரையிறுதி சுற்றில் பத்து போட்டியாளர்களில் இருந்து இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திறன் மேம்பாடு ஒலிம்பியாட் சாம்பியன்கள் செய்து காட்டிய உணவுகள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டன. மதிப்பூட்டப்பட்ட கடல் உணவுகளின் ருசியை மதிப்பிடும் அமர்வு MPEDA இன் திறன் ஒலிம்பியாட் அரங்கில் நடைபெற்றது.